Wednesday 28 December, 2011

குரூப்-2 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு, ஆறு வாரங்களில் நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



குரூப்-2 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு, ஆறு வாரங்களில் நியமன உத்தரவுகளை வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கான தேர்வு குறித்து, 2009ம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு தேர்வு நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலருக்கு, கடந்த அக்டோபரில் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதற்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலங்களில், பணிகளுக்கு நடந்த தேர்வை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். ஒதுக்கீடு உத்தரவின்படி, தங்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க உத்தரவிடக் கோரி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை, நீதிபதி சுகுணா விசாரித்தார். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு

ஆறு வாரங்களில் நியமன உத்தரவுகளை வழங்க வேண்டும் என, நீதிபதி சுகுணா உத்தரவிட்டார். இதையடுத்து, ஐகோர்ட் "முதல் பெஞ்ச்' முன், பணி நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக, நீதிபதியிடம் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். அதைத்தொடர்ந்து நடந்த விசாரணைக்குப் பின், நீதிபதி சுகுணா பிறப்பித்த உத்தரவு:

லஞ்ச ஒழிப்புத் துறையின் வரம்புக்குள் டி.என்.பி.எஸ்.சி.,யை கொண்டு வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, "முதல் பெஞ்ச்' முன் நிலுவையில் உள்ளது என்றும், நேரடித் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த பொதுநல வழக்கில், நியமனத்துக்கு டி.என்.பி.எஸ்.சி.,க்கு தடை விதித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 26ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தனி நீதிபதியின் உத்தரவும், கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தேர்வின் அடிப்படையில் நியமனங்களை மேற்கொள்ளலாம் என்றும் அப்பீல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நியமனங்களை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும், மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும், உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து, உத்தரவு பிறப்பிப்பதில் எந்த தடையும் இல்லை. இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும். இவ்வாறு நீதிபதி சுகுணா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment